சொட்டைப் பறவையும் குட்டை மைனாவும் ...

சொட்டைப் பறவையும் 
குட்டை மைனாவும் ...
--------------------------------------------------------------
என் பார்வையில் இருந்து 
தூரமாக தெரியும் 
அந்த தோட்டத்தின் 
சிறிய குடிலுக்கும் மேலாக
பசுமையுடன் கிளைகள் படர்ந்திருக்கும்
பருவகாலத்தில் மட்டுமல்ல
எப்போதும் பூக்கள் மலர்ந்து
காய்களாக மாறி 
கனிகள் உதிர்ந்துகொண்டேயிருக்கும்
யாருமற்ற வேளையில் வந்து அமரும்
அந்த வயது முதிர்ந்த பறவைகள்
உதிர்ந்து கிடக்கும் கருநீல நாவல் கனிகளை 
ஒருபோதும் சுவைத்ததில்லை
ஒற்றைக் காலை இழுத்துக்கொண்டு நடக்கும்
அந்த ஆண் பறவைக்கு
வயது மூப்பின் காரணமாக
தலையிலுள்ள முடிகள் உதிர்ந்திருக்கும்
அப் பறவை முதல் நாள் மாலையோ
அல்லது அந்த இரவோ 
இன்று அதிகாலையோ 
இங்கு வருவதற்கு முன்போ 
இல்லை அப்போது கூட இருக்கலாம்
வேறு எங்கோ ஒரு தோட்டத்தில் உள்ள 
நுனா அல்லது வேறு எந்த மரத்தின்  கனிகளை 
அது பலவிதமாக சுவைத்துவிட்டு வந்திருக்கக் கூடும்
அதன் அலகைக் கூட 
வரும் அவசரத்தில்
மரக் கிளைகளில் உரசி சுத்தப்படுத்தாமல் வந்திருக்கலாம்
அந்த வீச்சத்தை
இந்த சோடியை இழந்த மைனா உணரலாம்
காலம் கடந்த இறுதிக் காலத்தில்
எப்படி இருந்தால் என்ன என்றும் இது நினைத்திருக்கலாம்
அவைகளால் பறக்க இயலுமா
கிளைகளில் நீண்ட நேரம் 
தடுமாற்றமில்லாமல் அமர்ந்திருக்க முடியுமா என்றெல்லாம்
நீங்கள் யூகிக்கக் கூடும்
முன்னாடியே மரத்தின் அடியில் காத்திருக்கும் 
மைனாவிற்கும் அருகில்
அந்த சொட்டைப் பறவை வந்து அமரும் போதே
தரையில் கிடக்கும் சிதைந்த கனிகளை
தன் திருட்டு விழிகளால்
கால் இமை திறந்து 
கடைக் கண்ணால் பார்த்தபடி
குளிருக்கு நடுங்கி இறக்கைகளை  உதறுவது போல் 
அது இதுவென்று மெதுவாக குலாவி பேசியபடி
தன் உடலை சிலிர்ப்பிக்கொண்டு அருகில் வரும் 
எதிர்ப்பார்த்து காத்திருந்த குட்டை மைனா
எந்த சலனமும் அற்று 
ஊடல் ஒலியை காற்றில் வீசும்
அதற்கென்றே அலையும் அந்தப் பறவையும் 
இசைவு ஒலியை எழும்பும்
ஆரம்ப ஓசைகள் மேலிட்டு 
சிறிது சிறிதாக அடங்கும்
பெருத்த மெளனம் 
அந்த மரத்தின் கிளைகளெங்கும் பரவியிருக்கும்
அன்னார்ந்துப் பார்த்தால்
மையப் பகுதியில்
அந்தக் குட்டி மரத்தின் கிளைகள் ஒடிந்து
அசைந்தபடி  தொங்கிக்கொண்டிருக்கும்
பறவைகள் வேறொரு மரத்தில்
பாதுகாப்பாக அமர்ந்திருக்கும் ...!
                         - ஆம்பல் காமராஜ்.









Popular posts from this blog

சிவப்பு சிந்தனையாளன் தோழர் எஸ். ஏ. முருகையன்.