என் செல்ல மகள் ... ...
என் செல்ல மகள் ... ...
-----------------------------------------------------------
கண்களை கசக்கிக்கொண்டு வரும் மகளை
கைகளை ஏந்தி தூக்கி உச்சி நுகர்ந்து
"என்னம்மா" என்று கேட்டபோது
"அதோ அந்த மாமா ...
போய் அடிப்பா ..." என்று கை காட்டினாள்
மகள் காட்டும் திசையை பார்த்தபடியே
"விளையாட்டா அடிப்பாங்கடா ..." என்று சொல்லும்போது
என் கன்னத்தை திருகி
"அய்யோ அப்பா ... போயி அடி அவுங்களை ..." என்பாள்
"நம்ம மாமாடா அது ..." என்று
மீண்டும் நான் சொல்ல
என்னதான் இருந்தாலும்
குழந்தையின் கொஞ்சலும் சினுங்கலும்
கொள்ளை அழகுதான்
தனிமையில் குளிக்கும்
தன்மைக்கு வந்த அவள்
சின்னஞ் சிறிய வயதில்
குளிப்பாட்டி விட்ட நினைவு
அலையாய் அவள் மனசுக்குள் ஊர
தலை துவட்டியபடியே
தாயிடம் சொல்லிக்கொண்டிருப்பாள்
நெடு நேர குளியலை ஞாபகப்படுத்தி
தலையில் குட்டுவாள் மனைவி
"பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும்
எப்போதும் போல்
மாமா கிண்டல் செய்ததை
மறக்காமல் சொல்வாள்
நெடு நெடுவென வளர்ந்த அவள்
படப் படவென பல வேலைகளை
தானாக முன் வந்து செய்து
அம்மாவுக்கு சுமையை குறைப்பாள்
பெரிய பெண்களைப் போல்
அவ்வளவு இயல்பாக
தரையில் கால் மடக்கி அமர்ந்து
நீளமான கூந்தலை
இப்போதெல்லாம்
அவளே வாரி சரி செய்து பின்னிக்கொள்கிறாள்
உதிர்ந்த முடிகளை லாவகமாக
கைவிரல் இடுக்கில் சுற்றி
அந்த சிறிய காரிருள் கத்தையை
வாழைமரத்தின் மடல் இடுக்கில் செருகி வைப்பாள்
முடி உதிராது என்று
அம்மா சொன்ன வார்த்தைக்கு மதிப்பளித்து
"என்னடீ ...
இன்னைக்கி காலேஜ்ல
என்ன பாடம் நடத்துனாங்க ..."
என்று மாமா கேட்ட கேள்விக்கு
"ஈ ... சுரக்காய்க்கு உப்பு இல்லை ..." என்று
முகம் சுழித்து கோணல் காட்டி
சுண்டி சொடக்கி சொல்லிவிட்டு வருவாள்
"நாளைக்கு வருவியல்லே ..." என்று அவர்கள் விரட்டும்போது
"போங்கடா கிழட்டுப் பயலுவளே ..." என்று மிரட்டி விட்டு
வீர நடைபோட்டு வேகமாக நடந்து வருவாள்
என் செல்ல மகள் இலக்கியா ...
- ஆம்பல் காமராஜ்.