அப்பா இறந்த வருடம் - 1981
அப்பா இறந்த வருடம் - 1981
--------------------------------------------------------------
தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு
அப்பா கிளம்பும்போது
அழுதுகொண்டு பின்னாடியே ஓடுவேன்
தூக்கி தோளில் வைத்தபடி
வெளியெங்கும் நடந்து செல்வார்
பெட்டிக்கடை தென்பட்டால்
பெரிய பொரி உருண்டை வாங்கிக் கொடுப்பார்
சாலையில் ஓரமாக விற்கும்
வெள்ளரிப் பழம் வாங்கித் தருவார்
சைக்கிளில் கூவி விற்பனை செய்பவரிடம்
குச்சி ஐஸ் வாங்கிக் கொடுப்பார்
வாரச் சந்தைக்கு
பாய் விற்கப்போனால்
வரும்போது தட்டக்காரப்பொடி(மீன்)
வாங்கி வருவார்
வேலை செய்த இடத்தில் கூலி கொடுத்தால்
மாலை வீட்டுக்கு வரும்போது
வாழைப்பழம், ரஸ்க் வாங்கி வருவார்
இல்லையேல்
வெறும் கை வீசிய கைதான்
அம்மா கேட்டால்
அடிக்க கையை ஓங்குவார்
அவ்வளவு கோபம் வரும் அப்பாவுக்கு
"அவெங்கெ கெடந்துட்டுப் போறாங்கெடீ
செஞ்ச வேலைக்கு கூலி கொடுக்காத வக்கத்தெ பயலுவ
நீ சோறப் போடுறீ ..." என்பார்
"வீட்ல என்ன இருக்கு
ஒணக்கையா பொங்கி புளி தடவி வைக்க" என்று
அம்மா சொல்லும்போது
இருவருக்கும் சண்டை மெதுவாக ஆரம்பிக்கும்
நானும் அண்ணன்களும்
ஒரு மூலையில் போய் படுத்துக்கொள்வோம்
இரவு பட்டினியோடு தூங்கி
காலையில் எழுந்தால்
வயிறு அலங்க மலங்க கொலையா பசிக்கும்
அந்த ஏழு வயதில்
இதுக்கு மேல
வேறு என்னதான் ஞாபகம் இருக்கும் ...
- ஆம்பல் காமராஜ்.